Saturday, May 7, 2011

பார்ப்பனீயத்தை எதிர்ப்பதே அதிகார எதிர்ப்பு (காலச்சுவடு கண்ணனின் அவதூறும் கரிகாலனின் பதிலும்)

அன்பிற்கினிய திரு. கண்ணன்,
வணக்கம்.

காலச்சுவடில் ஆதாரம் அளிக்கிறேன் என மீண்டும் அவதூறு செய்திருக்கிறீர்கள். நன்றி.

என்னைப் பற்றி எழுத முனைந்து தேவையில்லாமல் அ. மார்க்ஸ் மீது புழுதி வாரி தூற்றுகிறீர்கள். அ. மார்க்ஸை விமர்சிக்கின்ற அளவிற்கு நீங்கள் என்ன சாதித்து விட்டதாக நம்புகிறீர்கள். அதே வேளையில் என் மீது நீங்கள் சுமத்தியிருக்கும் அவதூறுகளுக்கு பதிலளிக்க எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவலை தலித் விரோத நாவல் என இதுவரை வெளிவந்த களம் புதிது இதழ்களில் எவ்விடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அது போல களம் புதிது நடத்திய எந்த அரங்குகளிலும் அந்நாவல் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படவில்லை. மாறாக கோவேறு கழுதைகள் வெளி வந்த புதிதில் களம் புதிது இலக்கிய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அ. மார்க்ஸ், ரவிக்குமார், ஜெயமோகன், சுப்ரபாரதி மணியன், பெருமாள் முருகன், த. பழமலய், இரா. நடராசன் போன்ற வெவ்வேறு சிந்தனை வகைமைகள் கொண்ட எழுத்தாளர்கள் அவ்வரங்கில் கலந்து கொண்டனர். அன்றுதான் கவிஞர் அறிவுமதி அவர்கள் இமையத்தின் கோவேறு கழுதைகள் பற்றி வெகுவாகப் புகழ்ந்து அக்கூட்டத்திற்கு வந்திருந்த அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரை அவ்வரங்கில் கௌரவிக்கவும் செய்தோம். அப்போது மறைந்த உங்கள் தந்தை சுந்தர ராமசாமி அவர்கள் நீங்கள் குறிப்பிடும் அக்கட்டுரையை எழுதியிருக்கவில்லை.

இவ்விடத்தில் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தலித் ஒருவர் எழுதிய பிரதியில் தலித் விரோதப் போக்கும், பெண் ஒருவரின் பிரதியில் பெண்ணிய விரோதப் போக்கும் இருக்காது என அறுதியிட்டுக் கூற முடியாது. அப்படி அதை விமர்சித்தால் அது தலித் விரோத போக்காகவோ, பெண்ணிய விரோதப் போக்காகவோ அமையாது.

நண்பர் முருகேச பாண்டியன் குறிப்பிட்ட புதுவைச் சம்பவம் தவறானது. அது போல் நான் பேசவில்லை என்பதை அப்போது எங்களுடன் இருந்த எங்கள் ஊரைச் சார்ந்த படைப்பாளி ஹரிக்கிருஷ்ணா உயிர் எழுத்து இதழுக்கு மறுப்பெழுதினார். அதை அவ்விதழ் பிரசுரிக்கவில்லை.

வால்பாறை கூட்டத்தில் கவிதைகள் குறித்து உரையாடிய கவிஞர் நட. சிவக்குமார் என் கவிதைகளைப் பற்றி மட்டுமே அவ்வாறு குறிப்பிடவில்லை. கலாப்ரியா தொடங்கி தமிழ்க் கவிதைகளில் பதிவாகியிருக்கும் சாதிய மனநிலை குறித்தே பேசினார். வசதியாக நீங்கள் என்னை மட்டும் அவர் பழி சுமத்தி பேசியது போல் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.  நட. சிவக்குமார், ஹெச். ஜி. ரசூல் உள்ளிட்ட நாகர்கோயில் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள்தாம் என்னுடைய ஆறாவது நிலம் கவிதை தொகுப்பிற்கு ஏலாதி விருதளித்து பாராட்டினர் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அதே கூட்டத்தில் தோழர் மதிவண்ணன் சரியான விவரங்கள் இன்றி நான் தமிழ் படைபாளிகள் பேரியக்கத்தின் உறுப்பினர் எனக் குற்றம் சாட்டினார். அவ்விடத்திலேயே நான் அதை மறுத்துவிட்டேன்.

தமிழோசையின் இலக்கிய இணைப்பான களஞ்சியத்தில் தையலைப் போற்றுவோம் எனும் தலைப்பில் ஒரு சிறிய தொடரை எழுதியது உண்மை. தனித்தமிழ், சுற்றுச்சூழல்  அக்கறை, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு விளை நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு, மாணவர்களின் கல்வி நலன் போன்றவை குறித்த அக்கறையுடன் தமிழோசை செயல்பட்டு வந்ததை நடுநிலையாளர்கள் அறிவார்கள். இருப்பினும் இன்று நீங்கள் விமர்சனம் வைப்பது போல் இதை சாதி அடையாளத்துடன் தொடர்புபடுத்துவார்களோ என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. இதை களஞ்சியத்தில் தொடர் எழுதும்படி என்னிடம் வற்புறுத்திய யாணன் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் தமிழோசையில் சமூகத்தின் பல்தரப்பினரும் பங்களிப்பு செய்கின்றனர். நீங்கள் எழுதுவதை தவறாக யாரும் எண்ணமாட்டார்கள் என வலியுறுத்தினார். நான் அதில் எழுதியிருக்கும் பெண் ஆளுமைகளுள் ஒருவர் கூட வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.

என்னைப் பற்றி எங்களுர் பத்திரிக்கையாளர் நண்பர் கடற்கரையிடம் ஒரு சான்று வாங்கி பிரசுரித்துள்ளீர்கள். அவர் என்னோடு இணைந்து இலக்கிய தளத்தில் செயல்பட்டவர். ஒரு கட்டத்தில் கருத்து வேற்றுமை கொண்டு பிரிந்து சென்றுவிட்டார். என் மீது விரோத மனப்பான்மை உடைய ஒரு தனி நபரின் அபிப்ராயம் எவ்வகையில் நம்பகமானதாக நேர்மையானதாக இருக்க முடியும். என்னைப்பற்றி எங்கள் ஊர் நண்பர் குறிப்பிட்டதாக கடற்கரை கூறியிருப்பது அவரது புனைவு வளத்தை காட்டுகிறது.

நான் வசிக்கும் விருத்தாசலத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள்  இமையம், கண்மனி குணசேகரன், பட்டி. சு. செங்குட்டுவன்,  வே. சபாநாயகம், ஆழி வீரமணி, செ. அமிர்தராசு போன்றவர்கள். இவர்களிடம் நீங்கள் என்னைப் பற்றி கேட்டிருக்கலாம். உங்களைப் பற்றி என்னால் நாகர்கோயில் இலக்கிய நண்பர்களிடம் எதிர்மறையான அபிப்பிராயத்தை பெறமுடியாது என நீங்கள் நம்புகிறீர்களா?

உயிர் எழுத்தில் நான் எழுதிய கட்டுரை குறித்து உங்களுக்கு முரண்பாடு இருந்தால் அதை அப்போதே மறுத்திருப்பதுதான் அறிவு நாணயமாக இருக்கும். அதை நீங்கள் அலட்சியப்படுத்திவிட்டதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் உங்களால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை என்பது உங்கள் பத்தியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஞாநியின் கருத்து சுதந்திரத்தை எதிர்த்தேன். தி.மு.க. விற்கு உடுக்கடித்தேன் என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். ராமன் எந்த கல்லுாரியில் பொறியியல் படித்தான் என சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி வினா எழுப்பினார். அதற்கு அவரது நாவை அறுப்பேன் என இந்துத்துவா வெறியன் வேதாந்தி மூர்கத்தோடு குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஞாநி  அவர்கள் முதல்வர் கருணாநிதியின் வயோதிகத்தை எள்ளி நகையாடியதில் விமர்சன அறம் இல்லை.  மாறாக திராவிட  அரசியல் தலைவர் ஒருவரை  கொச்சைப்படுத்தும் பார்பனத் திமிரே அதில் அதிகம் வெளிப்பட்டிருந்தது. அதனால் தான் அதைக் கண்டிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழகத்தை ஆளும் தி. மு. க அரசு துணைபோயிருப்பதை கண்டித்து பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.

உங்கள் நெஞ்சில் கை வைத்து நினைத்துப் பாருங்கள். இந்த தேசத்தில் உங்களுக்கு, ஞாநிக்கு, சுப்ரமணிய சுவாமிக்கு, சோவுக்கு இல்லாத கருத்து சுதந்திரமா எங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு இருப்பது தான் கருத்து. அதை அப்படியே நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மறுத்தால் இப்படியெல்லாம் அவதூறை அள்ளி வீசுவீர்கள். இப்போதும் கூறுகிறேன் நீங்கள் கருணாநிதி, கனிமொழி போன்றவர்களை எதிர்ப்பதை அதிகார எதிர்ப்பாக நான்அவதானிக்கவில்லை. இந்தியாவில் பார்பனீயத்திற்கு உள்ள செல்வாக்காகவே இதை புரிந்துகொள்கிறேன்.

இறுதியாக ஒன்று நீங்கள் என்னைப் பற்றி கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும் நான் உங்கள் கூற்றின் படி ஒரு பிரமுகர் இல்லை. ஆனால் நீங்கள் காலச்சுவடை தமிழ்நாட்டின் மிகப் பெரும் இலக்கிய சக்தியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். காலச்சுவடு பற்றி இடதுசாரிகள், மதச்சார்பின்மையில் அக்கறை கொண்டவர்கள்,  பெரியாரியச் சிந்தனையாளர்கள், தமிழ்தேசியவாதிகள் போன்றவர்கள் எப்படி மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் முயல வேண்டும். மற்றபடி உங்களிமிருந்து எவ்வித நற்சான்றுக்கும் பாராட்டுக்கும் நான் ஏங்கவில்லை.

நன்றி.
                           
                                                                                                                                                                                அன்புடன்,
                                                                                                                                                                                                              கரிகாலன்

07.05.2011
விருத்தாசலம். 

No comments:

Post a Comment