Wednesday, February 5, 2014

ஏழாம் நுாற்றாண்டின் குதிரைகள் - நரனின் வலிமொழி

கரிகாலன்

பழமையிலிருந்து எப்படி விலகுவது? அதிகாரத்திலிருந்து எப்படி தப்பிப்பது? மரணத்தை எப்படி பகடி செய்வது? காதலிக்க எப்படி கற்றுக்கொள்வது? அன்பைச் சொல்ல எப்படிப் பழகுவது? வன்முறையை எப்படி எதிர்கொள்வது? இயற்கையை எப்படி பாதுகாப்பது? பசியையும் நோயையும் எப்படி கடப்பது? மனநோயாளிகளை, வேசிகளை, எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி நேசிப்பது? கடவுளிடம் எப்படி பேசுவது? இவ்வுலகில் எப்படித்தான் வாழ்வது? இப்படி நிறைய எப்படிகள் நம் ஒவ்வொருவரையும் துரத்திக்கொண்டிருக்கின்றன. இதற்கு நான் தஞ்சம் புக விரும்புவது கவிதையிடம் தான். அபபடியென்றால் கவிதை ஒரு என்சைக்ளோபீடியாவா என்று கேட்பீர்கள். மேற்கண்ட பிரச்சினைகளுக்கான என்சைக்ளோபீடியாவாக கவிதை இருக்குமாயின் அது அரசியல்வாதிகள் கையிலும் கார்ப்பரேட் சிஇஓக்களின் கைகளிலும், சாமியார்களின் கைகளிலும்தான் இருந்திருக்க முடியும். கவிதையை வாசிப்பதும் எழுதுவதும் ஒரு போராட்ட முறை, ஒரு தியான முறை, ஒரு அழகியல் விமர்சன முறை. ஒரு கற்பனை உலகை உருவாக்கிக்கொள்ளும் ஒரு முறை எனச் சொல்லிச்சொல்லி பார்த்து சுருக்கமாக ஒரு வாழ்க்கை முறை எனவும் புரிந்துகொள்ளலாம்.

இவ்வகையில் எனக்கு முன் கவிஞர் நரனுடைய  ஏழாம் நுாற்றாண்டின் குதிரைகள் இருக்கின்றது. எனக்கும் நரனுக்கும் இடையில் இக்கவிதைகள் ஒரு மெல்லிழையால் பிணைப்பை நெய்கின்றன. நான் கண்ட உலகை நரன் கண்டிருக்கின்றாரே. நான் கண்ட உலகில் நான் காணாதவற்றையும் நரன் கண்டிருக்கின்றாரே. நான் கண்ட சொல்லில் காணத்தவறிய அர்த்தத்தை நரன் கண்டிருக்கின்றாரே என்கிற மனநிலையை உருவாக்குகிறார். இவர் மட்டுமில்லை இவருடைய வயதில் தமிழில் ஒரு புதிய கவிதை அலையை நிறைய இளைஞர்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், செல்மா, லிபி ஆரண்யா, சபரிநாதன், மனோ, முத்துவேல்,வெய்யில், கணேசகுமாரன், நிலா ரசிகன், நேசமித்திரன் என இவ்வரிசை நீளக்கூடியது.

நரனுக்கு இது இரண்டாவது தொகுப்பு. கே.எப்.சி-யும், மெரிப்ரவுனும் சாப்பிட்டு வளர்கிற பணக்கார குழந்தைகள் மாதிரி சீக்கிரமாகவே வளர்ந்துவிட்டார். இந்த ஒப்பீட்டை மேலோட்டமாகத்தான் சொல்கிறேன். எதிர்மறை அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. நரன் போன்றவர்களின் இலக்கிய வளர்ச்சியை ஒரு மூத்த சகோதரனாக பெருமித்தோடு கவனிக்கிறேன். அவரது கவிதைகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் என்னிடம் ஏதும் இல்லை. ஒன்றை மட்டும் அவருக்கு அக்கறையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எண்களை அளவுகளை குறிப்பிட்டு சொல்கிற சில இடங்களில் பிரம்மராஜனும், ரமேஷ் பிரேதனும் நினைவுக்கு வருகின்றார்கள். இதை நரன் தவிர்ப்பது நன்று.

நரனுடைய முதல் கவிதை மிகச்சிறு கவிதை. செரிவான கவிதை. இப்பேருலகின் வன்முறையை அழகாக சொல்லிச் செல்கிறது இக்கவிதை. இன்று இந்தியக் குழந்தைகள் முதல் உலக நாடுகளின் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும் அவலம் நடந்துகொண்டிருக்கின்றது. வெகு அருகில் ஈழநிலத்தில் சோற்றுப் பசிக்காக ஏந்திய சிறார்களின் தட்டுக்களில் கொத்துக் குண்டுகள் விழுந்தன. பசியால் மடிந்த சோமாலியக் குழந்தைகள் நினைவை வருத்துகிறார்கள். ஏகாதிபத்திய வெறிக்கு பலியான வியட்நாம் மற்றும் ஈராக் குழந்தைகளையும் மறந்துவிட முடியாது. வன்முறையின் கொடுங்கரங்கள் இளம் மொட்டுகளையும் சிதைத்துவிடுகிற வன்மத்தை நரனின் வலி மொழிகள் இப்படி வெளிப்படுகிறது

கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

இந்தக் கவிதையைக் கடந்து செல்ல முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அடுத்தடுத்த கவிதையை வாசிக்க முடிந்தது. நரனின் டி.என்.ஏ-வில் நல்லவேளையாக முன்னோர்களின் தாக்கம் அதிகமில்லை. அவருடைய கண்கள் வேறு. அது குழந்தைகளுக்குரியது. குழந்தைகளுக்குரியது என்பதாலேயே கவிஞனுக்கும் உரியதாகிவிடுகிறது. இல்லையென்றால் அது பைத்தியக்காரனுக்கு உரியதாகவும் கூட இருந்திருக்கலாம். சூரியனை ஒரு கவிதையில் பீட்சா துண்டு என்கிறார். பிறகு அவரே “ஏன் இன்று ஒரு இந்திய சூரியன் இந்திய ஆயிரம் ரூபாய் தாளைப் போல் இருக்கக்கூடாது” என்கிறார் பங்கு மார்க்கெட்டில் வீழ்ந்த இந்திய பணத்தின் மதிப்பைப் போல் தான் இந்த சூரியனும் தீர்ந்து வருகிறது.  நமது எல்லையற்ற பேராசையால் இயற்கையை அழித்து ஒரு வெறுமையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பிரபஞ்சத்தை, பால்வெளி அண்டத்தை நேசிக்கின்ற மனதை இழந்து கல்லை, நீரை, மணலை காசாகப் பார்க்கிற மனநிலையை வந்தடைந்திருக்கிறோம். இம்மனநிலையை இதைவிடவும் எப்படித்தான் அழகாக கூறிவிட முடியும்.

வளர்ச்சி என்பது எல்லோருக்கும் பிடித்த வார்த்தையாய் இருக்கிறது. நமக்குக் கொண்டாட எப்போதும் ஒரு வளர்ச்சியின் நாயகர் தேவைப்படுகிறார். இந்நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கு ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. நரன் இங்கொரு வளர்ச்சியின் விளைவைக் காட்டுகிறார். நமக்கு இன்னும் அகலமான நீளமான தார்ச்சாலைகள் வேண்டும், புதிய புதிய வழிகளில் இருப்பு பாதைகள் வேண்டும். இவற்றிற்கான இடங்கள் வேண்டும். இவற்றைச் சமைக்க மனிதர்கள் வேண்டும். இருக்கவே இருக்கின்றன காடுகள், விவசாய நிலங்கள். இருக்கவே இருக்கின்றார்கள் மலைவாழ் மக்கள், விவசாயிகள். இவற்றை அனுபவிப்பவர்கள் யார்? யார் வளர யாருடைய நலனை பலிகொடுப்பது? நரனுடைய கவிதையில் உழவன் ஒருவனின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அவன் இனி விரையும் ரயில் வண்டியிலோ அல்லது துாக்கிட்டோ, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியை இவ்வளர்ச்சி உருவாக்கியிருக்கிறது. விவசாய நாடாக கருதப்பட்ட இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வண்ணம் இந்நாட்டின் விவசாய குடிகளை தற்கொலைக்குத் துாண்டியவர்கள் பிரதமராக, நிதியமைச்சராக, உள்துறை அமைச்சராக, முதலமைச்சர்களாக, பன்னாட்டு வங்கித் தலைவர்களாக உலா வருகின்றனர். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைப்பதும், சுங்க வரி வாங்குவதும் பன்னாட்டு நிறுவனங்கள் என்றால் அவனுடைய துாக்கு கயிற்றை மட்டும் யார் தயாரிப்பார்கள். நரன்       “கயிற்றின் அளவை வால்மார்ட் நிறுவனத்திற்கு நேர்த்தியாக மின்னஞ்சல் செய்தாகிவிட்டது”    என்கிறார். தீயின் விதைகளை கவிதைக்கு இடையில் துாவ நரன் கற்றிருக்கிறார்.

நரன் கவிதைகளுக்கு வெட்டுக்கிளிகளின் பாதங்கள். அது மண்புழுவைப் போல் ஊர்ந்து செல்வதில்லை. ஒரு படிமத்திலிருந்து இன்னொரு படிமத்திற்கு பாய்ந்து பாய்ந்து செல்கிறது. இடைவெளியில் நிறைய செய்திகளை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். கவிதை வாசகனை இவர் உயர்ந்த இடத்தில் வைத்து தன் கவிதையைப் பரிசளிக்கிறார். வாசகனை இயக்கத் தன்மையில் செலுத்தி மகிழ்கிறார். தன் கவிதையில் வாசகனையும் கூட்டு சேர்க்கிறார்.

“ திறமையான சவரக்கலைஞன் ஒருவன்
  கண்ணாடியிலிருக்கும்
  என் முகத்திற்கு சவரம் செய்துவிடுகிறான் ”     என நரன் ஒரு கவிதையை Virtual Reality-யாக குறிப்பிடுகிறார் இப்போது Virtual எது Reality எது என்று குழம்பிய நிலை ஏற்பட்டுள்ளது. இணையப் புரட்சி மற்றும் தகவல் புரட்சி உருவாக்கியிருக்கும் குழப்பம் இது. இதை மாய எதார்த்தம் என்பதை விடவும் எதார்த்தம் கடந்த எதார்த்தம் என்று சொல்லிப் பார்க்கலாம். எனது காலை “ஷு” விழுங்கிவிட்டது என்கிறார். “ சப்பாத்துகளற்ற கால் தனியே மாடிப்படியேறிக்கொண்டிருக்கிறது”  எனச் சொல்கிறார். இப்படி எதார்த்தத்தை குலைத்து தர்க்கத்தை பார்க்கிற பார்வை சமகாலத்தில் உருவாகி வருகிறது. தருக்கத்தின் வழியே உருவாகும் படைப்புகளினுாடாக மீண்டும் ஓருமுறை பிரதியில் நிலவுகிற அதிகார சமூகம் கட்டமைக்கப் படுகிறது என்கிற அடிப்படையில் இவ்வகை மாய எதார்த்தங்கள் தேவைப்படுகின்றன. கற்பனையைத் துாண்டி செழிக்கச் செய்வதின் மூலமே பழமைகளை வழக்கொழிக்க முடியும். விடுதலை நிறைந்த புதிய உலகை உருவாக்க முடியும். மரணம் குறித்து டி.எஸ். எலியட் குறிப்பிடும்போது “ மரணம் 100 கரங்களை உடையது ஆயிரம் வழிகளில் நடக்கக் கூடியது”  என்கிறார். இங்கு மரணம் என்பதற்கு பதிலாக கவிதையைக் கூட பொருத்திப் பார்க்க முடியும். நரன் கவிதைகள் முழுவதையும் படித்த பிறகு இருபத்தி ஐந்து வயதான சமகால அமெரிக்க இளம் பெண் எழுத்தாளரான Tiffany Fulton கூறியது நினைவுக்கு வருகிறது. “நான் மாறிவிட்டேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் நாம் என்னவாகுவோம் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதைவிடவும் சிறப்பாக உருவாகிவிட்டோம்” நரனுக்கும் தமிழ்க்கவிதைக்கும் இது பொருந்தக் கூடியது.

,e;

No comments:

Post a Comment