Wednesday, July 30, 2014


ஆற்றுப்ப​டை – 1

கவிஞ​னே
இத்​தேசத்​தை விட்டு ​​வெளி​யேற
இதுதான் சரியான தருணம்

துப்பாக்கிக​ளைக் கவிஞர்களுக்​கெதிராக
பிர​யோகிக்கும் கரு​ணையற்றவர்களல்லர் நாங்கள்
​வேற்று​தேசத்திற்கான கடவுச்சீட்​டை
இலவசமாகத் தறுமளவிற்கு பரந்த மனம் ​கொண்டவர்கள்

இது 56 அங்குல அகலம் ​கொண்ட
மார்பு​டையவர்களுக்குச் ​சொந்தமானது
​மேலும், ​தேச​மோ மார்​போ
எங்களுக்கு அகன்றிருக்க ​வேண்டும்
இத்​தேசத்​தை ​மைக்ரான் வினாடிகளில்
முன்​னேற்றும் பணிக்கு உங்கள் சின்னஞ்சிறு கனவுகள்
இ​டையூறாயிருக்கின்றன
 ​
காடுகளில் பு​தையுண்டுகிடக்கும் கிழங்குக​ளை மட்டு​மே
காணும் அளவிற்கு புராதனமானது உங்களது கண்கள்
அதற்கும் கீழ் குடி​கொண்டிருக்கும் டாலர் கடவு​ளை
ஏ​னோ உங்களால் தரிசிக்க முடிவதில்​லை

இரு​ளைத்தின்னும் உ​​லைக​ளைக்கூட
​நெருப்பு மிருகங்களாய்த்தான் பார்க்கிறீர்கள்

ஏழும​லை ஏழுகடல் தாண்டி விண்ணும் மண்ணும்
சங்கமிக்கும் புள்ளி​யை அ​டையும்
கடவுச்சீட்டு சட்​டைப்​பையில் கனத்துக்​கொண்டிருக்கிறது
தேச வளர்ச்சிக்கு ம​னைவி​யையும் காவு​கொடுப்பவர்கள்

கண்ணீர்.. ரத்தம்.. அறங்கள்..
இந்த அழுகுணி ஆட்டத்​தை நீங்க​ளேன்
துருவத்தின் பனிக்கா​டொன்றில் வி​ளையாடக்கூடாது
புரிந்து​கொள்ளுங்கள்
நி​றைய ​வே​லைகளிருக்கிறது

பு​ரை​யோடிய நீதி​தேவ​தையின் கண்களில்
சற்றுமுன்புதான் ​லென்ஸ் ​பொருத்தியிருக்கி​றோம்
காவி ஒளியில் ​தேசத்தின் புதிய வரலாற்​றை
அவள் வாசிக்கத்​தொடங்கியிருக்கிறாள்

என்னதானிருந்தாலும் பாரத ​தேசத்தின்
பத்தினி மரபில் வந்தவளல்லவா அவள்
ராமராஜ்யத்திற்கு ராவணவதங்களின் நியாயத்​தை
அவளுக்குப் புரிய ​​வைத்திருக்கி​றோம்

சூர்ப்பந​கையின் ச​கோதரர்களான நீங்க​ளோ
இன்னும் அறுபட்ட மூக்கிற்கான
நியாயத்​தை எதிர்பார்த்து நிற்கிறீர்கள்

வரலாற்றுக்கும் நிகழ்வுக்குமி​டை​யே
துருத்திக்​கொண்டிருக்கும் முரண்க​ளை
இடித்தும் எழுப்பியும் பின்நவீனத்துவப்பணியில்
உங்க​ளைவிடவும் முன்​செல்கி​றோம்

குருதி மணக்காத ​தெருக்களில் காதல் ​செய்யவும்
ஆயுதங்கள் ​மெளனித்த நகரங்களில்
​கேளிக்​கைக​ளைத் ​தொடரவும்
அணுக்கழிவுகளில்லாத கடல்களில்
படகுக​னை மிதக்கவிடவும்
குழந்​தைகளின் சடலங்கள் ஒதுங்காத நதிக​ரைகளில்
நாகரீகம் வளரவும்
இந்த பூமியிலிருந்து ​வெகுதூரம்
நீங்கள் விலகிச்​செல்லும் கடவுச்சீட்டு
இன்னும் கனத்துக்​கொண்டிருக்கிறது

கவிஞ​னே
இத்​தேசத்​தை விட்டு ​​வெளி​யேற
இதுதான் சரியான தருணம்.!

No comments:

Post a Comment